சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு
நாகர்கோவில் அருகே சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் பல இடங்கள் சேறும், சகதியுமாக உள்ளன.
இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் இடலாக்குடி குளத்தூர் பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று எதிர்பாராத விதமாக அங்குள்ள ஒரு சிறு பள்ளத்தில் தவறி விழுந்தது. அந்த பள்ளத்தில் சகதி இருத்ததால் அந்த மாடு சகதியில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த மாட்டால் வெளியே வரமுடியவில்லை. சகதியில் சிக்கி பரிதவித்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி மாவட்ட அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாட்டில் கயிறு கட்டி சகதியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. பள்ளத்தில் விழுந்து சகதியில் சிக்கியதில் அதிர்ஷ்டவசமாக மாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.