செங்கழுநீர் பூக்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்படுமா?


செங்கழுநீர் பூக்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்படுமா?
x

திருவாரூரில் மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூக்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்படுமா? என பக்தர்கள் எதிர்பாா்த்து உள்ளனா்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூரில் மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூக்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்படுமா? என பக்தர்கள் எதிர்பாா்த்து உள்ளனா்.

தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயங்களில் தலைமை பீடமாகும். தியாகராஜர் கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்று சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது. இங்கு பூக்கும் செங்கழுநீா் பூ என்பதும் தேவலோக பூவாக கருதப்படுகிறது. இந்த பூ எளிதில் எங்கும் பூக்கக் கூடியதல்ல. தனி சிறப்பு வாய்ந்த மலரை பாதுகாத்து வளர்க்க, வடக்கு வடம்போக்கி தெருவில் இருந்து தர்ம கோவில் தெரு வரை 5 வேலி நிலத்தை ஒதுக்கீடு செய்து பராமரிக்கப்பட்டு வந்தது.

சாயரட்சை பூஜை

இந்த 5 வேலி என்பது காலப்போக்கில் ஆக்கிரம்புகளால் குறைந்து கொண்டே வருகிறது, ஏட்டில் படிக்க கூடிய நிலைக்கு மாறி ஒரு சில குட்டைகள் மட்டுமே எஞ்சியுள்ளது. குட்டையில் மட்டும் வளரக்குடிய செங்கழுநீர் பூ, பரம்பரையாக சுந்தரமூர்த்தி என்பவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு மலரும் பூக்கள் நாள்தோறும் தியாகராஜர் சாயரட்சை பூஜையில் முக்கிய இடத்தை பிடித்து வந்தது. அதுவும் கால போக்கில் குறைந்து கொண்டே வந்தது.

ஆக்கிரமிப்பு

சுந்தரமூர்த்தி மறைவுக்கு பின்னர் இந்த குட்டை பராமரிப்பு இன்றி பூக்கள் உற்பத்தி முற்றிலும் தடைப்பட்டது. மேலும் இந்த குட்டை காலபோக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் செங்கழுநீர் பூக்களில் கிழங்கினை கொண்டு தியாகராஜர் கோவில் நந்தவன வளாகத்தில் சிறுகுட்டை போல் உருவாக்கப்பட்டு, செங்கழுநீர் அடையாளமாக இருந்து வருகிறது. எனவே இந்த செங்கழுநீர் ஓடையை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவுநீர் ஓடை

இதுகுறித்து ஆன்மிக சேவகர் கனகசபாபதி கூறியதாவது:-செங்கழுநீர் குட்டை மட்டும் காலப்போக்கில் பராமரிப்பு இன்றி தேய்ந்து வருகிறது.100-க்கும் மேற்பட்ட குட்டைகள் இருந்த நிலையில், தற்போது ஒரு சில குட்டைகள் அடையாளத்துக்கு உள்ளது. கடைசியாக சுந்தரமூர்த்தி என்பவர் மூலம் குட்டைகள் பராமரிக்கப்பட்டு செங்கழுநீர் பூக்கள் தியாகராஜர் பூஜையில் அலங்கரித்து வந்தது. அவருடைய மறைவுக்கு பின்னர் இந்த குட்டை பயனற்று காட்சி பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த குட்டைக்கு தண்ணீர் பாசனம் பெறும் பி வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறிவிட்டது.

சுற்றுச்சுவர்

மேலும் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த செங்கழுநீர் குட்டை அடையாளம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்புமிக்க செங்கழுநீர் பூவை தொடர்ந்து பெற ஓடைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை போதிய நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சுவர் அமைத்து செங்கழுநீர் ஓடையை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இந்த பூவை வளர்ப்பதற்கான தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும்.குறிப்பாக இந்த செங்கழுநீர் ஓடைக்கு ஆழ்துளை கிணறு அமைத்து சுத்தமான தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மகத்துவம் வாய்ந்த செங்கழுநீர் பூக்களை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story