ஆடு மேய்க்க சென்று ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த 3 பேர் மீட்பு


ஆடு மேய்க்க சென்று ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த 3 பேர் மீட்பு
x

ஆடு மேய்க்க சென்று ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த 3 பேர் மீட்கப்பட்டனர்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அருகே உள்ள அணைக்குடி கிராமத்தையொட்டி கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்நிலையில் அணைக்குடி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை(வயது 41), ராமநாதபுரம் மாவட்டம் வெண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த சேகர் மகன் ஆறுமுகம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளி ராமநாதபுரம் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த குண்டப்பன் மகன் ராசுகண்ணன்(47) ஆகிய 3 பேரும், கடந்த சனிக்கிழமை மாலை தஞ்சை மாவட்டம் கொள்ளுமாங்குடியில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று அவர்களுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்த்துள்ளனர். மேலும் அணைக்குடி கிராமத்திற்கு அவர்கள் ஆடுகளை ஓட்டி வந்தனர். அப்போது இரவு நேரமானதால் ஆடுகள் திசை மாறிவிடும் என்பதாலும், உடல் சோர்வின் காரணமாகவும் ஆடு மற்றும் குட்டிகள் என 490 ஆடுகளை கொள்ளிடம் ஆற்றின் திட்டில் பட்டி அடைத்து கட்டியுள்ளனர்.இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள அதிக அளவு உபரி நீரால் திட்டை சுற்றி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திட்டில் இருந்து ஆடுகளை ஓட்டி வர முடியாமல் திட்டிலியே தங்கிவிட்டனர். நேற்று முன்தினம் அண்ணாமலை அருகில் உள்ள தனது அணைக்குடி கிராமத்திற்கு வந்து சமைப்பதற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி 1.25 ஆயிரம் கன அடி நீர் சென்றதாலும், அவர்கள் தங்கியிருக்கும் நடுத்திட்டு பகுதியில் தண்ணீர் அதிகமாக செல்வதாலும் அச்சமடைந்த அவர்களது உறவினர்கள், 3 ேபரையும் மீட்க வேண்டும் என்று போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 8 பேர் கொண்ட குழு கொள்ளிடம் இளந்தங்காடு நடுத்திட்டு பகுதிக்கு சென்று சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, 3 பேரையும் பத்திரமாக படகு மூலம் மீட்டு அணைக்குடி பொன்னாற்று வாய்க்கால் வழியாக முனீஸ்வரன் கோவில் அருகே கரைக்கு கொண்டு வந்தனர். அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story