குவைத்தில் மீட்கப்பட்டவர்கள் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தவிப்பு
குவைத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டவர்கள் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் சொந்த ஊர் செல்ல பணம் இன்றி தவித்தனர். நண்பர்கள் கொடுத்த பணத்தால் அவர்கள் பஸ் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.
குவைத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டவர்கள் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் சொந்த ஊர் செல்ல பணம் இன்றி தவித்தனர். நண்பர்கள் கொடுத்த பணத்தால் அவர்கள் பஸ் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.
குவைத்தில் தவிப்பு
அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வேலைக்காக குவைத் சென்று இருந்தனர். ஆனால் அங்கு சிலர் வேலை இன்றியும், சிலர் வேலைக்கான சம்பளம் இன்றியும் அவதி அடைந்தனர். இது பற்றி அவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர், குவைத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தமிழக அரசின் முயற்சியால் தமிழகத்தை சேர்ந்த 19 பேர் மீட்கப்பட்டு விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
சத்திரம் பஸ் நிலையத்தில் தவிப்பு
பின்னர் வேன் மூலம் அழைத்துவரப்பட்டு திருச்சியில் 10 பேரும், மதுரையில் 9 பேரும் இறக்கி விடப்பட்டனர். இதில் திருச்சியில் இறக்கி விடப்பட்ட 10 பேரும் பணம் இன்றி சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தவித்தனர். இவர்களில் பெரம்பலூரை சேர்ந்த 4 பேரும், அரியலூரை சேர்ந்த 2 பேரும், கடலூரை சேர்ந்த 2 பேரும், புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேரும் அடங்குவர். திருச்சி வரை வேன் மூலம் கொண்டுவந்து விட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல எந்த உதவியும் செய்யவில்லை என புலம்பினர். மாவட்ட நிர்வாகம் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
நண்பர்கள் கொடுத்த பணம்...
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தவிப்பது பற்றி தங்களது நண்பர்களுக்கும் தெரிவித்தனர். அதன் பேரில் நண்பர்கள் ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளனர். இந்த பணத்தை பெற்ற அவர்கள் 10 பேரும் பஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் சத்திரம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.