விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா தலைமையில் நடந்தது


விழுப்புரம் மாவட்டத்தில்    அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்    மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:34+05:30)

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா தலைமையில் நடந்தது.

விழுப்புரம்

ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் விவரங்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கிராம ஊராட்சிகளில் சாலைகள், குடிநீர் வசதி, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஏரிகள், அணைக்கட்டு, தடுப்பணைகளின் விவரங்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப்பணிகள், 'மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்களின் விவரங்கள், நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாள சாக்கடை பணிகள், மழைநீர் வடிகால், தூய்மைப்பணிகள் உள்ளிட்டவை குறித்து துறை வாரியாக ஒவ்வொரு அலுவலரிடமும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா கேட்டறிந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப்பணிகளும் நல்ல தரமுடைய பணிகளாக இருக்க வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வளர்ச்சி பணிகள்

முன்னதாக விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், மக்கும் குப்பையிலிருந்து மரம், செடி மற்றும் விவசாயத்திற்கு தேவையான நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுவதையும், மக்காத குப்பையிலிருந்து சாலை போடுவதற்கான இடுபொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிக்கப்படுவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நகராட்சித்துறை சார்பில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story