திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி


திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
x

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.

திருவள்ளூர்

பலத்த மழை

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடி மின்னலுடன் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதில் திருவள்ளூர், பெரியகுப்பம், புட்லூர், காக்களூர், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, திருநின்றவூர், மணவாளநகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது.

திருவள்ளூரில் அதிகபட்சமாக- 72 மி.மீ. மழையும், ஆர்.கே.பேட்டையில் குறைந்தபட்சமாக- 4 மி.மீ. மழையும் பெய்தது. ஜமீன் கொரட்டூரில்- 67.20 மி.மீ., திருவாலங்காடு - 54 மி.மீ., திருத்தணி- 48 மி.மீ., பூந்தமல்லி- 41 மி.மீ., பொன்னேரி- 38 மி.மீ., சோழவரம்- 36 மி.மீ., பூண்டி- 35 மி.மீ., ஆவடி- 32 மி.மீ., செங்குன்றம்- 30 மி.மீ., தாமரைப்பாக்கம்- 29 மி.மீ. கும்மிடிப்பூண்டி- 17 மி.மீ., ஊத்துக்கோட்டை- 14 மி.மீ., பள்ளிப்பட்டு- 8 மி.மீ., என திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் - 525.20 மி.மீ. மழையும், சராசரியாக - 35.01 மி.மீ. மழையும் பெய்தது.

ஆஸ்பத்திரியில் தேங்கிய மழைநீர்

கனமழை காரணமாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரக்கூடிய நோயாளிகள், பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைவரும் பெரும் அவதியடைந்தனர்.

மேலும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறக்கூடிய கழிவு நீரும் மழைநீருடன் கலந்து தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழை நீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story