வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x

சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். மேலும் மழைநீரை அகற்றக்கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். மேலும் மழைநீரை அகற்றக்கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கனமழை

சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

சேலத்திலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக பல தெருக்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடியது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் மைதானத்தில் நேற்று காலை பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதேபோல் சேலம் பேர்லேண்ட்ஸ் கண்ணகி தெருவில் அதிக அளவு மழை நீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

சாலை மறியல்

கிச்சிப்பாளையம், எருமாபாளையம், நாராயணநகர், சன்னியாசிகுண்டு உள்பட சில இடங்களில் தாழ்வான பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் பெரிதும் அவதியுற்றனர். அவர்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.

குறிப்பாக எருமபாளையம் அருகே காந்திநகர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நேற்று காலை வரை மழைநீர் வடியாமல் தேங்கி நின்றதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி சென்ற மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மழைநீரை அகற்றக்கோரி திடீரென அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மழை பதிவு

தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். பின்னர் அதிகாரிகள் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 80.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-61.8, எடப்பாடி-26, சங்ககிரி-24, கரியகோவில்-19, ஓமலூர்-15, தம்மம்பட்டி-10, பெத்தநாயக்கன்பாளையம்-6, ஏற்காடு-4.2, வீரகனூர்-4 ஆகும்.

சேலத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மாலை 5.30 மணி அளவில் மாநகரில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. பின்னர் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டு இருந்தது. மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.


Next Story