விழுப்புரம் அரசு கல்லூரியில் நெகிழ்ச்சி: தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்த மாணவர்
விழுப்புரம் அரசு கல்லூரியில் தேங்காய், பூசணிக்காய் உடைத்து மாணவர் ஆரத்தி எடுத்தாா்.
விழுப்புரம் அருகே உள்ள வளவனூரை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு வரலாறு பாடத்திட்டம் பயின்று வருகிறார். இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கடந்த 4-ந் தேதி தொடங்கி இறுதி தேர்வான பஞ்சாயத்து ராஜ்ஜியம் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் மாணவர் பிரசாந்த், இறுதித்தேர்வை எழுத செல்லும்போது கல்லூரி வாயிலில் தேங்காயில் கற்பூர ஆரத்தி எடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றுள்ளார். அதன் பிறகு தேர்வு முடிந்து வெளியே வந்தவுடன் இறுதித்தேர்வு என்பதாலும், கல்லூரியில் இறுதியாண்டு முடிவடைவதால் கல்லூரி வாயிலில் பூசணிக்காய் ஆரத்தி எடுத்து உடைத்துள்ளார். இவரின் இத்தகைய செயலை சக மாணவர்கள், தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இறுதி ஆண்டினை முடித்துவிட்டு கல்லூரியை விட்டு செல்வதால் தேர்வு எழுதியவுடன் கல்லூரிக்கு நன்றி செலுத்தும் விதமாக மாணவர் பிரசாந்த், ஆரத்தி எடுத்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
........