சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு


சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:45 PM GMT)

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், விளை நிலங்களை பாதுகாக்க வேண்டியும், கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், விளை நிலங்களை பாதுகாக்க வேண்டியும், கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜக்கேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார், போடிச்சிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா ஆஞ்சி ஆகியோர் தலைமையில் நெருப்புகுட்டை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நெருப்புகுட்டை கிராமத்தில் பல தலைமுறைகளாக 350 குடும்பத்தினரும், நாகமங்கலம் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயத்தை நம்பியே உள்ளோம். இந்த நிலத்தில் நெல், தக்காளி, பீன்ஸ், தென்னை, வாழை, மா, கேரட், முட்டைகோஸ், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை பயிரிட்டு வருகிறோம்.

தடுக்க வேண்டும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிப்காட்டிற்காக எங்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகளை கையகப்படுத்துவதாக வருவாய்த்துறையினர் அறிவித்தனர். இதனால் எங்களுடைய விவசாய நிலங்கள், குடியிருப்புகள் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் எங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படும்.

எனவே சிப்காட்டிற்காக விவசாய விளை நிலங்களை எடுப்பதை தடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story