விழுப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் மாற்று இடம் வழங்க கோரிக்கை


விழுப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக  குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்  மாற்று இடம் வழங்க கோரிக்கை
x

விழுப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம்- திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. விழுப்புரத்தை அடுத்த தோகைப்பாடி பஸ் நிறுத்தம் அருகில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.

இந்த நிைலயில் அங்குள்ள சாலையின் இருபுறமும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 30 வீடுகள், 10 கடைகளை கட்டி சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளும்படி நோட்டீசும் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு

இந்நிலையில் நேற்று காலை தோகைப்பாடி பஸ் நிறுத்தம் அருகில் சாலை விரிவாக்க பணிகளை தொடங்குவதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் நெடுஞ்சாலைத்துறையினர் சென்றனர்.

இதையறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் காலை 8.30 மணியளவில் அங்கு திரண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

பொதுமக்கள் மறியல்

மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், தங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கக்கோரியும், மாற்று இடம் வழங்கிய பிறகே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலை விரிவாக்க பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியவாறு காலை 8.40 மணியளவில் அங்குள்ள பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசாரும், விழுப்புரம் குடிமைப்பொருள் தனி தாசில்தார் இளங்கோவன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வசந்தப்பிரியா ஆகியோர் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்காலிகமாக நிறுத்திவைப்பு

அப்போது மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு இதுபற்றி கொண்டு சென்று மாற்று இடத்தை வழங்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், காலை 9 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. பொதுமக்களின் இந்த போராட்டத்தினால் சாலை விரிவாக்க பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


Next Story