குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு
மணியகாரம்பாளையத்தில் குடிநீர் குழாய் பதிக்க குடி யிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கணபதி
கோவை கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் சீனிவாசா நகர் செல்லும் ரோட்டில் நேற்று காலை 10 மணியளவில் கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அதிகாரி விமலா தலைமையில் குடிநீர் குழாய் பதிக்க சென்றனர்.
அவர்கள், அங்குள்ள ஒரு புதிய குடியிருப்பு பகுதி வழியாக குடி நீர் குழாய்களை கொண்டு செல்ல இருந்தனர்.
அதற்கு அந்த குடி யிருப்புவாசிகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த குடியிருப்புக்கு செல்லும் இரும்புக்கதவையும் அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், குடியிருப்புவாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அந்த குடியிருப்பின் இருபுறமும் இருந்த இரும்புக் கதவை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்ற முயன்றனர். அதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் மாநகராட்சி ஆணையாளர், முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அதற்கு பதில் கிடைத்த உடன் மாநகராட்சி பணி செய்யலாம். அதுவரை காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த அதிகாரிகள் அந்த குடியிருப்பின் இருபுறமும் இருந்த இரும்புக்கதவுகளை அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த இரும்புக்கதவுகள் அகற்றப்பட்டன.
ஆனால் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கும் சில நாட்களில் தொடங்கும் என்று கூறிவிட்டு மதியம் 1 மணியளவில் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.