கடலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்


கடலூரில்    ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு    பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 12 Oct 2022 6:45 PM GMT (Updated: 12 Oct 2022 6:46 PM GMT)

கடலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


கடலூர் முதுநகர்,

கடலூர் அருகே வண்டிபாளையத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் அங்குள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமானதாகும். இந்த குளத்தை சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளது.

இதில் சில வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அவற்றை அகற்றிக்கொள்ளுமாறும் கடலூர் மாநகராட்சி தரப்பில் இருந்து நோட்டீசு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று கடலூர் மாநகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக அங்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரத்தை இயக்க விடாமல் ஒருவர் அதன் முன் சென்று படுத்து கொண்டார்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து தாசில்தார் பூபாலசந்திரன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் தரப்பில் இங்கு எந்த வீடுகளும் ஆக்கிரமிப்பில் இல்லை என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து தற்சமயம் குளத்தில் இருந்து சுமார் 3 அடி முதல் 5 அடி வரையுள்ள பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பை மட்டும் அகற்றுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி ஒருசில வீடுகளில் மட்டும் பின்பகுதியில் கழிவறைகள், சுற்றுச்சுவர் இருந்தன. இவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story