ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; வியாபாரிகள் தர்ணா போராட்டம்


ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; வியாபாரிகள் தர்ணா போராட்டம்
x

தாரமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலம் நகராட்சியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து காய்கறி, பழக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருவதால் தாரமங்கலத்தில் இருந்து சங்ககிரி-இரும்பாலை செல்லும் பிரதான சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. .இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகிறது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் நேற்று காலை நகராட்சி ஆணையாளர் முஸ்தபா மற்றும் துப்புரவு ஆய்வாளர் கோபிநாத், வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோருடன் நகராட்சி ஊழியர்கள் மார்க்கெட் பகுதிக்கு வந்து சாலையை ஆக்கிரமித்து வைத்து இருந்த கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி திடீரென 10-க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன், தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் மார்க்கெட் பகுதிக்கு வந்து வியாபாரிகளிடம் பேசி உடனே தர்ணாவில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.அதன் பிறகு மார்க்கெட் குத்தகைதாரர்கள்.கடை வியாபாரிகள் அனைவரையும் வரவழைத்து அதே பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story