நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு


நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 May 2023 6:45 PM GMT (Updated: 11 May 2023 6:46 PM GMT)

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் உள்ள நீர்நிலையை ஆக்கிரமித்து 121 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற நேற்று திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், உளுந்தூர்பேட்டை நீர்வளத்துறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர் பூங்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் எந்திரந்துடன் சென்றனர்.

இந்த நிலையில் நீர்நிலையான ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெண்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் எங்களுக்கு மாற்று இடம் இல்லை. எனவே வீடுகளை அகற்றக்கூடாது என கூறினர். தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் விஜி தணிகாசலம் அதிகாரிகளிடம், வீடுகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினார். அதனை கேட்டறிந்த தாசில்தார் கண்ணன், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story