நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு
பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் டிராக்டரை நிறுத்தி வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூர்
பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் டிராக்டரை நிறுத்தி வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான நிலம்
கோவை மாவட்டம், பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குத்தகை எடுத்து, பல வருடங்களாக ஒரு சிலர் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு முறையாக குத்தகை செலுத்தாமல் தொடர்ந்து பயன் பெற்று வருவதாக கோவில் நிர்வாகத்துக்கு, புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து நிலத்தை மீட்டு மறு குத்தகை விட, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், முடிவு செய்யப்பட்டது.
வழி மறித்தனர்
இந்த நிலையில்நேற்று காலை பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு, சொந்தமான இடத்தை மீட்க, பேரூர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் துணை ஆணையர் விமலா தலைமையில் கோவில் அலுவலக நிர்வாகிகள் மற்றும் பேரூர் போலீசார் சென்றனர்.
அங்கு விவசாய சங்கத்தை தேர்ந்த சிலர் குத்தகைதாரருக்கு ஆதரவாக திரண்டு நின்றனர்.மேலும், கோவில் நிலத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே விவசாயிகள் டிராக்டர் வாகனத்தை நிறுத்தி, அதிகாரிகளை வழி மறித்தனர்.
அப்பொழுது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து, விவசாயிகள் கோஷங்களை எழுப்பி, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் மற்றும் பேரூர் தாசில்தார் இந்துமதி ஆகியோர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் குத்தகைதாரருக்கு ஆதரவாக வந்த, விவசாய சங்கத்தினருடன் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமையில் பேச்சுவார்த் தை நடந்தது. அதில், உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் விவசாயிகள் தரப்பு ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் துறை சார்பான அறிவிப்பு பலகைகளை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நட்டு வைத்தனர்.
கோரிக்கை
இதுகுறித்து, விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளபோது எவ்வித அறிவிப்புமின்றி, விவசாய பூமிக்குள் நுழைந்து, அறிவிப்பு பலகை வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தற்போது, குத்தகைதாரர்களாக இருந்து வரும் விவசாயிகளை எந்த இடையூறும் செய்யாமல் குத்தகை விலையை வரைமுறைப்படுத்தி, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். குத்தகைதாரர்களை, ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி, அப்புறப்படுத்துவது ஏற்புடையதல்ல.
அறிவிப்பு பலகை வைத்திருப்பது தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து, குத்தகை விவசாயிகளாக தொடர்ந்து நீட்டிப்பு செய்து தரக்கோரி, கோரிக்கை வைக்க உள்ளோம் என்றனர்.