பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி தீர்மானம்
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் தேவி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) தனது வார்டில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. அதனால் வார்டுசபை கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார். பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டம் நடைபெற முடிவு செய்யப்பட்டது. எங்கள் பகுதியில் எந்தவித பணிகளும் நடைபெறாத நிலையில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரியை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் கலந்து கொள்ள வர இயலாது என அவர் தெரிவித்து விட்டார் என கவுன்சிலர் கூறினார். பின்னர் ஆரம்பித்த வார்டு சபை கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் சவுந்தரப்பிரியா கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் வார்டில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என புகார் தெரிவித்தனர். எனவே கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரியை இடமாற்றம் செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மக்களுக்காக வளர்ச்சிப் பணிகளை செய்ய வலியுறுத்தி விரைவில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.