மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட 26,793 மனுக்களுக்கு தீர்வு- மேயர் இந்திராணி பெருமிதம்


மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட 26,793 மனுக்களுக்கு தீர்வு- மேயர் இந்திராணி பெருமிதம்
x

மதுரை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட 26,793 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று மேயர் இந்திராணி தெரிவித்தார்.

மதுரை


மதுரை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட 26,793 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று மேயர் இந்திராணி தெரிவித்தார்.

மார்க்கெட் இடமாற்றம்

மதுரை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் இந்திராணி தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சம் வருமாறு:- மாநகராட்சியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் மண்டல வாரியாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. நான் பொறுப்பேற்றது முதல் இதுவரை முகாமில் 2 ஆயிரத்து 809 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 2 ஆயிரத்து 527 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் மின் அஞ்சல் மூலமாக மொத்தம் 27 ஆயிரத்து 463 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 26 ஆயிரத்து 793 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவது போல, மாநகராட்சி பணியாளர்களுக்கு மாதம்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியுடன் இணைந்த விரிவாக்க பகுதிகளில் தெருவிளக்குகள், எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும். மாநகராட்சி சமுதாய கூடங்கள் சீரமைக்கப்பட்டு குறைந்த வாடகையில் மக்களுக்கு அளிக்கப்படும். மாநகரில் 2 புதிய நவீன மயானங்கள் அமைக்கப்படும். அனைத்து கவுன்சிலர்களுக்கும் அலுவலகம் கட்டி தரப்படும். மாநகராட்சி சார்பில் புதிய உணவு கூடம் அமைக்கப்படும். கீழமாரட் வீதியில் செயல்பட்டு வரும் வெங்காய மார்க்கெட் ரூ.10 கோடியே 30 லட்சம் செலவில் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் அருகே அமைக்கப்படும். மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையம் சீரமைக்கப்படும்.

மருத்துவ முகாம்கள்

மாநகரில் உள்ள 100 பிறப்பு-இறப்பு பதிவு மையங்கள் மூலம் கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 137 பிறப்பு சான்றிதழ்களும், 16 ஆயிரத்து 384 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை விரைவாக பொதுமக்கள் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கு அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.1,666 கோடியே 37 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருகிறது.

மாநகராட்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 10 இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களின் உடல் மற்றும் மனவலிமை மேம்பட ஒரு குழு மைதானம் அமைக்கப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டறிந்து மன நல ஆலோசனை வழங்க மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள். இடவசதியற்ற மாநகராட்சி பள்ளிகளில் ஒரு அறை உருவாக்கி அங்கு சதுரங்கம், கேரம் உள்ளிட்ட உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தரப்படும். கல்வியின் அவசியத்தை விளக்கும் வகையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். மாநகராட்சி பள்ளிகளில் படித்து மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திட பிரதான மருத்துவர்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

முதல்-அமைச்சர் திட்டம்

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் 4 முகாம்கள் நடத்தப்பட்டு 4 ஆயிரம் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதன் முறையாக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரு இறப்பு கூட இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நகரில் உள்ள நுண் உரக்கழிவு நிலையங்கள் மூலம் தினமும் 130 மெட்ரிக் டன் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி நகரில் புகையிலை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோர்களிடம் இருந்து இதுவரை அபராதமாக ரூ.15 லட்சத்து 93 ஆயிரத்து 480 வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story