துணை வட்டாட்சியர் பட்டியலை ரத்து செய்து திருத்தியபட்டியலை வெளியிட தீர்மானம்
2022-ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பட்டியலை ரத்து செய்து திருத்தியபட்டியலை வெளியிட வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட அமைப்பு கூட்டம்
கரூரில் நேற்று தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கரூர் மாவட்ட அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த தட்டச்சர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் கரூர் மாவட்ட வருவாய் அலகில் வெளியிடப்பட்ட 2012-ம் ஆண்டுக்கான உதவியாளர் பட்டியலை ரத்து செய்து திருத்திய பட்டியலை வெளியிட வேண்டும். விதிமுறைகளுக்கு மாறாக கரூர் மாவட்ட வருவாய் அலகில் வெளியிடப்பட்ட 2022-ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பட்டியலை ரத்து செய்து திருத்தியபட்டியலை வெளியிட வேண்டும்.
முதுநிலை பட்டியலை வெளியிட...
கரூர் மாவட்ட வருவாய் அலகில் வழங்கப்படும் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்களில் பாரபட்சமாக செயல்பட்டு மாற்று சங்கத்திற்கு ஆதரவாக பதவிகளை பெற்றுதந்து நீண்ட காலமாக கரூர் மாவட்டத்திலேயே பணிபுரிந்து வரும் தனித்துணை கலெக்டரை (ச.பா.தி) பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.கரூர் மாவட்ட அலகிற்கு நகரப்பட்டியலில் இருந்து வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் பயிற்சிக்கு அனுப்புவதை கைவிட வேண்டும். 2018 மற்றும் 2020-ம் ஆண்டு நேரடி நியமனத்தின் மூலம் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்தோருக்கு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும்.
பணி மாறுதல் வேண்டும்
புகார் ஏதும் பெறப்படாத துணை வட்டாட்சியர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டினை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிந்து வரும் தட்டச்சர்கள், இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பல பொருட்கள் கையாளும் வகையில் பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில துணை பொதுச்செயலாளர் சையது காதர் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட தலைவர் தனசேகரன் நன்றி கூறினார்.