சிவன்மலையில் 'கிரானைட்' குவாரி அமைக்க எதிப்பு தெரிவித்து தீர்மானம்
காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் சிவன்மலையில் ‘கிரானைட்’ குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
காங்கயம்
காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் சிவன்மலையில் 'கிரானைட்' குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கு புதிய வாகனம் வாங்கியதற்கு அங்கீகாரம் அளித்தல், காங்கயம் வட்டார அரசு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட தொகை செலுத்த அனுமதித்தல், ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க அனுமதி அளித்தல், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் 'கிரானைட்' குவாரி அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.
நிதிகளுக்கு அனுமதி
காங்கயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதிக்கு உரிய அங்கீகாரத்தை உடனே அளிக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றியத்திற்கு தேவையான எரிபொருள், எழுது பொருட்கள், அடிப்படை தேவைகள், பழுது பார்த்தல் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கு அனுமதி வழங்குதல் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. ஒன்றியக்குழு கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.