தூய்மை பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு


தூய்மை பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மண் எடுத்ததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். தூய்மை பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

மண் எடுத்ததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். தூய்மை பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகராட்சி கல்வி நிதியின் கீழ் தலா ரூ.19 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்தல் உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணை தலைவர் கவுதமன்:- என் குப்பை என் பொறுப்பு திட்டத்தில் சுகாதார பணிக்கு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இந்த உபகரணங்கள் தரமானதாக வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும். அவர்களுக்கு தீபாவளியையொட்டி போனஸ் வழங்க வேண்டும்.

அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு

கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.):- பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மண் எடுத்து தனியாருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதனால் நகராட்சிக்கு நிதி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அனுமதி இல்லாமல் மண் எடுக்கப்பட்டதை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்.

கவுன்சிலர் துரையார் (ம.தி.மு.க.):- நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அப்போது தான் கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.170 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சரியாக நடக்கிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சி.டி.சி. மேட்டில் எடுக்கப்பட்ட மண் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்திற்கு தான் கொண்டு செல்லப்பட்டது.

உரிய நடவடிக்கை

தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்:- பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


Next Story