இறந்த கோவில் காளைக்கு மரியாதை
எஸ்.புதூர் அருகே இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர்.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர்.
கோவில் காளை
எஸ்.புதூர் அருகே முசுண்டப்பட்டியில் சூறாவளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கிராம மக்களால் வழங்கப்பட்ட கன்றுக்குட்டி நன்கு வளர்ந்து கோவில் காளையாக வலம் வந்தது. இந்த காளை கோவிலில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொண்டு வந்தது. மேலும் உள்ளூர், வெளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை பெற்று வந்தது.
இந்த காளையை அந்த பகுதி மக்கள் மிகவும் பாசத்தோடும், மரியாதையாகவும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோவில் காளைக்கு கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
கிராம மக்கள் மரியாதை
நேற்று காளை திடீரென இறந்தது. இதை அறிந்த கிராம மக்கள் வேதனை அடைந்து துக்கம் அனுசரித்தனர். இறந்த கோவில் காளையின் உடல் முழுவதும் மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் வைத்து கோவில் முன்பாக வைத்திருந்தனர். தொடர்ந்து கிராமம், கோவில் சார்பில் மாலை, வேட்டி, துண்டு அணிவிக்கப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் தனித்தனியாக மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெண்கள் கும்மியடித்தும், ஒப்பாரி பாட்டு பாடியும் அஞ்சலி செலுத்தினர். பின்பு வாணவேடிக்கைகளுடன் காளையின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முசுண்டப்பட்டி பட்டவன் கோவில் முன்பாக பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.