மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்


இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆகும்.

விருதுநகர்

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

சக மனிதர்களை போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

21 வகையானவர்கள்

கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர்.

2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.

தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.

அரசு திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்குக்கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலைத்தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராள மனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது.

அதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்:-

இலவச வீடுகள்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணைத்தலைவர் அய்யக்கள்:-

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தற்போது வழங்கப்படும் உதவித்தொகை பெயரளவில் தான் எங்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது. ஆதலால் எங்களின் வாழ்வாதாரத்திற்காக வேறு யாரையாவது சார்ந்து தான் இருக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுகள் கட்டித்தர வேண்டும்.

தாயில்பட்டி நெல்சன்:- எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன அரசு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் நன்றாக இருக்கும்.

முன்னுரிமை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ்:-

மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 25 ஆயிரம் பேருக்கு அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 8 ஆயிரம் பேர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் கொடுத்து காத்து இருக்கிறார்கள். சிவகாசி தாலுகாவில் மட்டும் 50 பேர் வீட்டு மனைப்பட்டா கேட்டு காத்திருக்கிறோம். கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, உணவு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

பெரும் பாக்கியம்

சி.எஸ்.ஐ. அறிவுசார் குறைவுடையோர் பள்ளி தாளாளர் தயாளன்பர்னபாஸ்:-

எங்கள் பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். 30 வயதிற்கு மேற்பட்ட 15 பேருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தற்போது எங்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். சி.எஸ்.ஐ. அறிவுசார் குறைவுடையோர் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள் இவர்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

ரேஷன் கடை

ஸ்ரீவில்லிபுத்தூர் வீரபுத்திரன்:- எனக்கு அரசு சார்பில் மூன்று சக்கர சைக்கிள் கிடைத்துள்ளது. மேலும் அரசு சலுகைகளை பெற ஏற்பாடுகள் செய்து வருகிறேன். ஒவ்வொரு ஊரிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கடைகள் ஏற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க முன்னாள் மாநில நிர்வாகி சுந்தர்ராஜன்:-

மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கி உள்ளது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வாரந்தோறும் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் இதற்காக வரும் டாக்டர்கள் 1 மணி நேரம் கூட இருப்பதில்லை. சில நேரங்களில் அவர்கள் வராத நிலையில் நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்குவதில் இடர்பாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ெரயில் பயணங்களில் மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய மிகுந்த அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே இதற்கு முறையான ஏற்பாடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மாற்றுத்திறனால் பத்மஸ்ரீ விருது பெற்றவர்

அமர் சேவா ராமகிருஷ்ணன் (வயது 69). ஓர் அற்புதமான மனிதநேயர். எந்திரதுறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தபோது கடந்த 1974-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த கடற்படை அதிகாரிகளுக்கான உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவரது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்துக்கு கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயல் இழந்தன. ஆனால் அவர் செயல் இழக்கவில்லை. மனம் தளரவில்லை.

கடந்த 1981-ம் ஆண்டு தென்காசி அருகே ஆய்க்குடியில் `அமர் சேவா சங்கம்' என்ற நிறுவனத்தை தொடங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.

முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கு சிகிச்சையும், அடைக்கலமும் அளிக்கப்படுகிறது. பல்வேறு தொழிற்கூடங்கள், பள்ளிகளையும் நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

உடல் உறுப்புகள் இயங்காவிட்டாலும் தனது மனவலிமையினால் இந்த பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடன் அவரைப் போன்றே கை, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளியான சங்கரராமன் அந்த நிறுவனத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

மத்திய-மாநில அரசுகள் இந்த நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இங்கு வந்து ஒரு கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தென்காசி பகுதிக்கு வரும்போது அமர் சேவா சங்கத்திற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

உடலில் இருப்பது ஊனம் அல்ல என்பதற்கு அமர் சேவா ராமகிருஷ்ணன் ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறார்.


நலத்திட்ட உதவிகள்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர்:-

மாவட்டத்தில் 38 ஆயிரம் பேருக்கு மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அட்டை வழங்க மாவட்ட அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அரசிடம் 3 சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற பல்வேறு உபகரணங்கள் வழங்க தேவைப்படும் பட்டியலை வழங்கி உள்ளோம். அவை ஒதுக்கீடு செய்யப்படும் போது உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களது கோரிக்கை மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் காது கேளாதோருக்கான உயர்நிலைப்பள்ளி விருதுநகர் மற்றும் சிவகாசியிலும், சிவகாசி சாட்சியாபுரத்தில் மனநலம் குன்றியோருக்கான பள்ளி விடுதி வசதியுடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story