லேசான காய்ச்சலால் ஓய்வு; நலமாக இருக்கிறேன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


லேசான காய்ச்சலால் ஓய்வு; நலமாக இருக்கிறேன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
x

லேசான காய்ச்சலால் ஓய்வு எடுத்து வருவதாகவும், நலமாக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தொடர்ச்சியான பணிகள், தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, 20-6-2022 அன்று (நேற்று) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், 21-6-2022 அன்று (இன்று) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு அரசின் செய்திக்குறிப்பாக வெளியிடப்பட்டது. அத்துடன், 19-6-2022 அன்று (நேற்று முன்தினம்) வி.பி.ராமன் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாத நிலையில், என்னுடைய உரையை தி.மு.க. பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் படித்தார்.

பதற்றப்பட வேண்டாம்

இவை செய்திகளாக வெளியானதும், என் மீது அன்புகொண்ட தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும், அரசியல் பிரமுகர்களும், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பதற்றத்துடன் உடல்நலன் குறித்து விசாரிக்க தொடங்கி விட்டார்கள். என் மீதான அவர்களின் அன்புதான் அந்த பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன். எனினும், பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை.

லேசான காய்ச்சல் என்பதால் டாக்டர்கள் அறிவுரைப்படி அதற்குரிய மருந்துகளுடன், கொஞ்சம் ஓய்வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது. இன்றும், நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல பணியினை தொடர்ந்திட முடியும். நலமாகவே இருக்கிறேன். பணிகளை தொடர்ந்திடுவேன்.

ஓய்விலும் அத்தியாவசிய பணிகள்

சரியாக சொல்வதென்றால், ஓய்விலும் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டுதான் வருகிறேன். நேற்றிரவு சென்னையில் பெய்த திடீர் மழையால், எந்த இடத்திலாவது தண்ணீர் தேங்கியுள்ளதா?, வடிகால் அமைப்பு பணிகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்து அதிகாலையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசித்து விவரங்களை தெரிந்து கொண்டேன்.

ஒரு சில இடங்களில், வடிகால் கட்டமைப்பு பணிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டிய சூழல் இருப்பதையும், அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் தெரிந்துகொண்டு, அவற்றை விரைந்து முடிக்குமாறு பணித்துள்ளேன்.

உறுதியோடு இருக்கிறேன்

மக்களின் தேவைகளை, அவர்களுக்கான வசதிகளை நிறைவேற்ற வேண்டிய முதல்-அமைச்சர் என்ற பொறுப்பை சுமந்துள்ள நிலையில், அந்த பொறுப்பை வழங்கியது, தி.மு.க. எனும் பேரியக்கத்தின் வெற்றிதான் என்பதை நான் ஒரு நொடிப்பொழுதும் மறந்ததில்லை. நம் தலைவர் கருணாநிதியின் அன்பு தொண்டர்களாகிய உங்களின் உழைப்பில் கிடைத்த வெற்றியால், தி.மு.க. தலைவர் என்ற பொறுப்பை தோளில் சுமந்திருக்கும் நான் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளேன்.

தி.மு.க. கட்டமைப்பு வலிவோடும், பொலிவோடும் இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நாம் பணியாற்றிட முடியும். தலைவர் கருணாநிதி 5-வது முறையாக தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பினை ஏற்றபோது, உள்ளாட்சித்துறை அமைச்சராகும் வாய்ப்பினை எனக்கு வழங்கினார். இன்று முதல்-அமைச்சர் என்ற பொறுப்பில் அமர்ந்து, மாநிலத்தின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் பாடுபடும் அதேநேரத்தில், உள்ளாட்சி ஜனநாயகம் தழைப்பதற்கான பணிகளை மேற்கொள்வதிலும் உறுதியோடு இருக்கிறேன்.

வழிகாட்டு நெறிமுறைகள்

தி.மு.க.வின் சார்பில் பொறுப்பேற்றுள்ள, 'நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு' வரும் ஜூலை 3-ந் தேதியன்று நாமக்கல்லில், 'உள்ளாட்சியிலும் நல்லாட்சி' என்ற தலைப்பில் நடைபெற இருக்கிறது. தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில், அதற்கான பணிகளை மாவட்டச்செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறார்.

நான் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சித்தலைவர்கள், துணைத்தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று, மக்கள் பணியை தொய்வின்றி ஆற்றுவதற்கான தி.மு.க.வின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளை பெறவிருக்கிறார்கள்.

ஆயத்தமாக இருக்கிறேன்

நாமக்கல்லில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சரிபாதி அளவிலும், ஏன் அதற்கு சற்று கூடுதலான அளவிலும் பெண் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார்கள். வீட்டை காப்பதுபோல நாட்டை காக்கும் திறன்மிக்க மகளிருக்கு நிர்வாக பயிற்சிக்களமாக இந்த மாநாடு அமையவிருக்கிறது.

இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் அரசு பணிகளையும், கட்சி செயல்பாடுகளையும் வழக்கம்போலத் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன். ஓய்வில்லை நமக்கு. முதலிடமே இலக்கு. தொண்டர்களாகிய உங்களுடைய பேரன்பின் பலம் கொண்டு, அந்த இலக்கை அடைவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story