கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
குறிச்சி குளக்கரையில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
கோவை,
கோவை குறிச்சி குளக்கரையில் கற்பக விநாயகர் பொங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான 60 சென்ட் நிலம் போத்தனூர் செல்லும் சாலையில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு விட்டு உள்ளனர். ஆனால் குத்தகை எடுத்தவர் அதற்கான பணம் செலுத்தவில்லை. இதையடுத்து நிலத்தை ஒப்படைக்கும்படி கூறப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கு கோவிலுக்கு சாதகமாக வந்ததையடுத்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் பணி நேற்று நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, ஆய்வாளர் கவுதம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அத்துடன் பாதுகாப்புக்காக போத்தனூர் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை மீட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலத்தை மீட்டதை தொடர்ந்து அங்கு இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.