ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு


ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு
x

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகள் விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை,

ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக உள்ளது.

அதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னையில் இளைஞர்கள், மாணவர்கள் இரவு பகலாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர்.

அனுமதி

அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சாதகமான உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது. பின்னர் மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

2017-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ஜல்லிக் கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகளுடன் ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்பட்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் அலங்காநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

கட்டுப்பாடுகள்

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக், உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளாார். அதில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்படுகின்றன. கால்நடை வதைத் தடுப்பு விதிகள் 2017-ன் அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

காளைகளுக்கு எந்தவொரு துன்புறுத்தலும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும். அதன் பின்னர் அனுமதி அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு குழு

மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து முன்அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. கால்நடை வதைத் தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்துகிறவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.

காளைகளுக்கு தேவையற்ற வலிகளை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில், அவற்றின் பாதுகாப்பை சுட்டிக்காட்டும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். போட்டிகளை நடத்துவதற்கு முன்பதாக ஜல்லிக்கட்டு குழு அமைக்கப்பட வேண்டும். காளைகளை வளர்க்கிறவர்களுடன் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த வேண்டும்.

வீடியோ படம்

ஜல்லிக்கட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்களிடம், விதிகளை முறையாக பின்பற்றுவதற்கான உத்தரவாதத்தை பெற வேண்டும். அனுமதிக்கான விண்ணப்பத்துடன் காப்பீடு நகல் இணைக்கப்பட வேண்டும்.

விதிகளின் அடிப்படையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட வேண்டும். விளையாட்டுக்காக காளை வருவதில் இருந்து விளையாட்டு முடிந்து அது செல்லும் வரை வீடியோ படம் எடுக்கப்பட வேண்டும். அரசு பட்டியலிட்ட இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அதை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறை

ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவிக்கிறது. அதன்படி, மாநில அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். போட்டிகள் நடக்கும் இடத்திற்கு கண்காணிப்புக்காக அரசு அதிகாரி அனுப்பப்பட வேண்டும்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விதிகளின்படி விளையாட்டு நடப்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா கட்டுப்பாடு

போட்டிகளை நடத்தும்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர், ஒரு உதவியாளருடன் வரலாம். போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்பு காளை மற்றும் அவர்கள் 2 பேரின் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.

அவர் காளையின் அருகிலேயே நின்று கொண்டிருக்க வேண்டும். அவர்கள் 2 பேருமே 2 கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும். போட்டி நடக்க இருப்பதற்கு முன்பு 2 நாட்களுக்குள் கொரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனையை எடுத்து அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் 2 பேருக்கும் மாவட்ட நிர்வாகம், அடையாள அட்டையை வழங்க வேண்டும்.

வீரர், பார்வையாளர் எண்ணிக்கை

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 300 ஆக இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் மஞ்சு விரட்டு, வடமாடு விளையாட்டுகளுக்கும் இந்த எண்ணிக்கைதான் பொருந்தும். எருது விடும் விழாவுக்கு 150 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

3 நாட்களுக்கு முன்பே அவர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களும் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

அதுபோல கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பார்வையாளர்கள் பகுதியில் உள்ள இருக்கையின் எண்ணிக்கைக்கு பாதி எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அல்லது 150 பேரை மட்டும் அனுமதிக்கலாம். அவர்களும் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

உறுதியான தடுப்புகள்

போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை அதிகாரிகள் பட்டியலிட வேண்டும். முன்பு நடந்த அசம்பாவித சம்பவங்களையும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவலையும் சரிபார்க்க வேண்டும். விதிகளை பின்பற்றாத ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

காளைகளை பிடித்து நிறுத்தி வைக்கும் இடத்தில் மறைவுப்பகுதி அமைத்தல், வாடி வாசல், காளைகள் ஓடும் பகுதி ஆகியவற்றில் உறுதியான தடுப்புகள் அமைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். காளைகள் ஓடும் பகுதியில் இருந்து அவற்றை உரிமையாளர் பெற்றுக்கொள்ளும் இடம் வரை 8 அடி உயர தடுப்புகள் அமைக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் அந்த இடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து கிணறுகளும் மூடப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நடக்கும்போது கால்நடை மருத்துவ குழு, வாடிவாசல் மேலாண்மை குழு, காளை ஓடும் பகுதி மேலாண்மை குழு, மருத்துவ குழு, அவசர கால குழு ஆகியவை பணியில் இருக்க வேண்டும். கால்நடை ஆம்புலன்ஸ் அங்கு நிறுத்தப்பட வேண்டும்.

ஊக்க மருந்து

காளைகளுக்கு மருத்துவ பொது பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அமைதியின்மை, நீர்சத்து குறைவு, சோர்வான காளைகள் புறக்கணிக்கப்படும். காளைகளின் உடல் நலனுக்கான சான்று அளிக்கப்பட வேண்டும். காளைக்கு மது, ஊக்க மருந்து அளிக்கப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து சோதிக்கப்பட வேண்டும்.

விளையாட்டு முடிந்ததும் ஓய்வுக்காக காளை உடனே வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். காளைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முகூர்த்தக்கால் நடும் விழா

இதற்கிடையே மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ., மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காளைகள் பதிவு

இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டது. காளைகளுக்கான தகுதி சான்றிதழை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.


Next Story