ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்கள் எதிர்ப்பு


ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Aug 2023 3:45 AM IST (Updated: 13 Aug 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு அரசு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு குடியேற ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு அரசு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு குடியேற ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாண்டியாறு, நடுவட்டம், நெல்லியாளம், சேரங்கோடு, கொளப்பள்ளி மற்றும் குன்னூர், கோத்தகிரியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் (டேன்டீ) செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் டேன்டீ குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் குடியிருப்புகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

இதனால் குடியிருப்புகளை விரைவில் காலி செய்ய வேண்டும் என டேன்டீ நிர்வாகம் கடந்த ஆண்டு நோட்டீஸ் வழங்கியது. இதற்கு ஓய்வு பெற்ற தொழிலாளர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் குறைந்த சம்பளத்தில் வாழ்க்கை முழுவதும் பணியாற்றிய நிலையில், குடியிருப்புகளை காலி செய்ய முடியாது என தெரிவித்தனர்.

கருத்து கேட்பு கூட்டம்

பின்னர் அவர்களுக்கு மாற்றிடம் வழங்கி குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் டேன்டீ குடியிருப்புகளில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேரம்பாடி அருகே காரக்கொல்லி, ஊட்டி கேத்தி, கோத்தகிரி பகுதியில் உள்ள அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கூடலூர் பாண்டியாறு டேன்டீ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி தலைமை தாங்கி கருத்துகளை கேட்டார்.

அப்போது அரசு ஒதுக்கும் குடியிருப்புகள் போதிய இடவசதி இன்றி மிகவும் குறுகலான அறைகளாக உள்ளது. எனவே, அந்தந்த டேன்டீ பகுதியில் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தாசில்தார், டேன்டீ அலுவலர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.


Next Story