ஓய்வுபெற்ற அரசு பஸ் நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு பஸ் நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் பாராட்டு தெரிவித்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் நாகமுத்து (வயது 36). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர், திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் பண்டங்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த கடை முன் 4 பவுன் தங்க சங்கிலி கீழே கிடந்துள்ளது. அதை எடுத்த அவர் திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருச்செந்தூர் சன்னதி தெருவை சேர்ந்த ராமலிங்கம் (64) என்பவருடையது என தெரியவந்தது. இதையடுத்து ராமலிங்கத்திடம் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் அந்த சங்கிலியை ஒப்படைத்தார். இவர் அரசு பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். பின்னர், தங்க சங்கிலியை ஒப்படைத்த நாகமுத்துவை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.