ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி: மாநில தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம் -தமிழக அரசு உத்தரவு


ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி: மாநில தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம் -தமிழக அரசு உத்தரவு
x

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தரை தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையர் பதவி சில மாதங்களாக காலியாக இருந்தது. இந்த காலியிடத்தை நிரப்புவதற்கான ஆலோசனை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தர் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பரிந்துரையை கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி இருந்தது. அவருடன் 4 தகவல் ஆணையர்களையும் தேர்வு செய்து கவர்னருக்கு அரசு பரிந்துரை செய்திருந்தது.

யார் யார்?

இந்த நிலையில் மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தரை தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக நியமித்து கவர்னர் ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தாமரை கண்ணன், சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த வக்கீல் பிரியகுமார், பெசன்ட்நகர் சி.பி.டபுள்யு.டி. குடியிருப்பைச் சேர்ந்த திருமலைமுத்து ஐ.சி.எல்.எஸ். (ஓய்வு), பள்ளிக்கரணையைச் சேர்ந்த பேராசிரியர் செல்வராஜ் ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அவர்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் வரையோ அல்லது அவர்களுக்கு 65 வயது முடியும் வரையோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை அவர்கள் அந்த பதவி வகிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பீகாரை சேர்ந்தவர்

தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஷகில் அக்தர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் 1962-ம் ஆண்டு பிறந்தார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியாக ஷகில் அக்தர் 1989-ம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்தார். தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, தர்மபுரி மாவட்டம் அரூரில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியை தொடங்கினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் பணி ஓய்வு பெற்றார்.

சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பணி ஓய்வு பெறும்போது சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story