ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்,ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்துக்கு இடம் ஒதுக்கக்கோரி மனு கொடுத்தனர்.
குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி புகார் அளிக்க வந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கம் சார்பில் மனு அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் தமிழ்நாடு காவல்துறையில் 35 முதல் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றோம். தற்போது, சங்கம் ஒன்றை தொடங்கி நடத்தி வரும் நிலையில் 95 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளோம்.
இந்த சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அமர்ந்து செயல்படுவதற்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டுமென ஏற்கனவே மனு அளித்து இருந்தோம். அப்போது, புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறந்ததும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே சங்கத்துக்கு தனி இடம் ஒதுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் குறைத்தீர்வு கூட்டத்தில் கடன், சீட்டு பணம் மோசடி, நிலம் மற்றும் பணம் மோசடி உள்பட பல்வேறு புகார்கள் குறித்து 24 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.