ஓய்வுபெற்ற ஆசிரியர் போராட்டம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் போராட்டம் இறப்பு சான்றிதழ் தராமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் முதியவர் ஒருவர், இறந்துபோன தனது தந்தைக்கு இறப்புச்சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிறைக்கு செல்லும் போராட்டம் என்று கோஷமிட்டார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. உடனே அவரிடம், இங்கு கோஷமிடக்கூடாது என்று போலீசார் அறிவுரை கூறியதோடு, கோரிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறினர். அதன் பின்னர் அவர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனது தந்தை பெயரில் உள்ள சொத்துக்களை பட்டா மாற்றம் செய்யவும், விற்பனை செய்யவும் இறப்புச்சான்றிதழ் தேவைப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள நிலையில் பல ஆண்டுகளாக இறப்புச்சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். எனவே தாங்கள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.