ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை, மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்க்காணல் செய்யப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேர்க்காணல் நடைபெறவில்லை. தற்போது ஓய்வூதியர்கள் இந்த ஆண்டுக்கான (2022-23) நேர்க்காணல் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு நேரில் கருவூலத்துக்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி இந்திய தபால் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தவாறு தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தியோ அல்லது அரசு இ-சேவை மையங்கள், ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலம் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தியோ, கருவூலம் மூலமாக நடக்கும் இலவச மின்னணு வாழ்நாள் சான்றிதழ் முகாமில் பங்கேற்று வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்யலாம்.
மேலும் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெற ஆதார் எண், பி.பி.ஓ. எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகிய விவரங்களை ஓய்வூதியர்கள் வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வங்கி கணக்கு உள்ள வங்கியின் மேலாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலமாக கருவூலத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.