காய்கறி மார்க்கெட்டில் பெயர்ந்து விழும் மேற்கூரை
மயிலாடுதுறை காய்கறி மார்க்கெட்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மயிலாடுதுறை காய்கறி மார்க்கெட்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காய்கறி மார்க்கெட்
மயிலாடுதுறை நகரில் திரு.வி.க. காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த காய்கறி மார்க்கெட் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. கூரை கொட்டகையில் இயங்கிய இந்த மார்க்கெட்டில் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் அங்கு 1997-ம் ஆண்டு நகராட்சி சார்பில் 66 கடைகள் கட்டப்பட்டது.
இந்த கடைகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுஏலம் விடப்படும். ஏலத்தொகையை செலுத்தி வியாபாரிகள் கடையை எடுத்து நடத்தி வருகின்றனர். கடைகள் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது.
பொதுமக்கள் அச்சம்
மழைக்காலங்களில் மழைநீர் கசிவும் ஏற்பட்டு பெரும் அச்சத்தோடு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் காய்கறி மார்க்கெட் உள்ளே சென்றுவர அச்சப்படுகிறார்கள். கடைகள் சேதம் அடைந்துள்ளதால், வியாபாரிகள் ஒருசிலர் தங்கள் கடையின் மேற்கூரையை பழுதுநீக்கம் செய்துள்ளனர்.
இருந்தபோதிலும் சிமெண்டு காரைகள் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகிறது. மழையும் அவ்வப்போது பெய்வதால் மக்களும், வியாபாரிகளும் உயிர் பலி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை குடோன்களாக வைத்துக் கொண்டு காய்கறிகளை சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
சீரமைக்க கோரிக்கை
இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திரு.வி.க. மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரைகள் அதிக அளவில் பெயர்ந்து விழுந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக அந்த கடையில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. பொதுமக்கள் அச்சமின்றி மார்க்கெட்டிற்கு சென்றுவர வசதியாக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.