பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிளஸ்-2 மாணவர் வெட்டிக்கொலை
பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிளஸ்-2 மாணவரை 3 சிறுவர்கள் வாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை
பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிளஸ்-2 மாணவரை 3 சிறுவர்கள் வாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவர்
சிவகங்கையை அடுத்த சாத்திரசன்கோட்டைைய சேர்ந்தவர் செல்வக்கண்ணன். இவருடைய மகன் திருமுருகன் (வயது 16).
இவர் மல்லல் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். திருமுருகன் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.
பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக புத்தக பையுடன் திருமுருகன் மல்லலில் இருந்து பஸ்சில் ஏறினார். மரக்குளம் பஸ் நிறுத்தம் அருகே இறங்கிய அவர், வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
சரமாரியாக வெட்டிக்கொலை
அப்போது மாணவரை வழிமறித்த 3 சிறுவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த வாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதை பார்த்்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள்.. உடனே அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலை இருந்ததால் உடனடியாக மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு வரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவர் திருமுருகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரதாப், மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்..
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக 3 சிறுவர்கள் சேர்ந்து திருமுருகனை வாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.