ஒடிசாவில் இருந்து திரும்பிய அமைச்சர் உதயநிதி மற்றும் சிவசங்கர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சந்திப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
சென்னை,
கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் ஒடிசா சென்றிருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு, தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் சென்னை திரும்பினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நேரடியாக மருத்துமனைக்கு சென்று ஆய்வு நடத்தியதில் அங்கு தமிழர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. 8 பேரின் தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 2 பேரின் தகவல் கிடைத்துள்ளது. மற்ற 6 பேரும் (அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்திக்) நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.என தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
விபத்து நடந்த பாலசோரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மீட்பு பணிகள், பயணிகள் சென்னை திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர்கள் அவரிடம் தெரிவித்தனர்