வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தம் காரணமாக பதவி இறக்கம் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கு ஆணைகளை விரைவில் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை உடனடியாக வெளியிடவும், அரசுடன் ஏற்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்கவும் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
பணிகள் பாதிப்பு
இதன் காரணமாக சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வேலை நிறுத்தத்தால் வருவாய் துறை தொடர்புடைய பணிகள் பாதிக்கப்பட்டன. சப்-கலெக்டர் அலுவலகத்த்தில் 14 பேரில் 9 பேரும், பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் 104 பேரில் 20 பேரும், ஆனைமலையில் 83 பேரில் 15 பேரும் பணிக்கு வரவில்லை.
கிணத்துக்கடவு தாலுகாவில் 12 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கூறுகையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந்தேதி மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று (நேற்று) ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.






