கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை எச்சரிக்கை


கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை எச்சரிக்கை
x

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

வெள்ளப்பெருக்கு

கர்நாடகாவில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ளநீர் 1.60 லட்சத்திற்கு (கனஅடி) மேல் மேட்டூர் அணைக்கு வருவதன் காரணமாக நேற்று மேட்டூர் அணையில் இருந்து 1.60 லட்சம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் 3-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, தவிட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

மேலும் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல், காவிரி ஆற்றை கடந்து செல்லுதல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் காவிரி ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் இருக்க இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.


Next Story