வருவாய் ஆய்வாளர்-கிராம நிர்வாக அலுவலர் கைது
வருவாய் ஆய்வாளர்-கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டனர்.
கீழப்பழுவூர்:
பட்டா மாற்ற லஞ்சம்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், செங்கராயன்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சச்சிதானந்தம்(வயது 35). விவசாயி. 1974-ம் ஆண்டு பட்டாவாக இருந்த இவரது நிலம், தவறுதலாக அரசு தரிசு நிலமாக மாறிவிட்டது. அந்த நிலம் பட்டாவாக இருந்ததற்கு உரிய பத்திரங்களை வைத்து, மீண்டும் பட்டா நிலமாக மாற்றித்தர மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு கொடுத்துள்ளார். மாவட்ட கலெக்டரும் ஆய்வு செய்து, பட்டா நிலமாக மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த நிலத்தை பட்டாவாக மாற்றித் தரக்கோரி, ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜை சச்சிதானந்தம் அணுகியுள்ளனர். அவர்கள், தரிசு நிலத்தை பட்டாவாக மாற்றித்தர சச்சிதானந்தத்திடம் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளனர்.
கையும், களவுமாக பிடித்தனர்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சச்சிதானந்தம், இது பற்றி அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து அவர்களை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்படி, நேற்று முன்பணமாக ரூ.20 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரிடம், சச்சிதானந்தம் கொடுத்துள்ளார்.
அதனை செந்தில்குமார் பெற்றபோது, அப்பகுதியில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையிலான போலீசார், அங்கு வந்து வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜையும் பிடித்து விசாரித்தனர்.
கைது
விசாரணையில், அவருக்கும் இதில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் குறித்து இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.
விவசாயியிடம் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.