வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். ஐகோர்ட்டு தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தாரை, பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் தொடக்கத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் யாரும் உள்ளே செல்லாதவாறு படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் வழிவிட்டு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது.
சீர்காழி
இதேபோல் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜீவ் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளவரசன், மத்திய செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட துணை தலைவர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலையில் 39 அலுவலர் பணியாளர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு பணியை புறக்கணித்து தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தால் நேற்று சீர்காழி தாலுகா அலுவலகம் அலுவலர்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
குத்தாலம்
குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க உறுப்பினர் குத்தாலம் வட்ட செயலாளர் அல்போன்ஸ் ராணி தலைமை தாங்கினார். இதில் மத்திய செயற்குழு உறுப்பினர் பிச்சைபிள்ளை மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.