வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பணியை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 5 மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்திலும் அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜோஷி தலைமை தாங்கினார். செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
வெறிச்சோடின
பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் பலதுறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு தேவைகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கே.வி.குப்பம்
இதேபோல் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜா தலைமை தாங்கினார். வருவாய்த் துறையினர் இதில் கலந்துகொண்டனர். இதனால் தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது.