கூடுதல் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யக்கோரி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்கள்


கூடுதல் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யக்கோரி     கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்கள்
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான கூடுதல் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யக்கோரி கோரிக்கை அட்டை அணிந்தவாறு வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்றினர்.

விழுப்புரம்

மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மகளிர்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் வருவாய்த்துறையை சார்ந்த அலுவலர்கள் ஆவர்.

கடந்த 2 மாதங்களாக வருவாய்த்துறை அலுவலர்கள் கடுமையான பணிச்சுமையோடு களப்பணியாற்றி தகுதியான நபர்களை கண்டறிந்து இத்திட்டம் தொடர்பான ஆவணங்கள், தரவுகளை சேகரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்து இரண்டே மாதத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மகளிர்கள் பயன்பெறும் வண்ணம் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்

இந்நிலையில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை எவ்வித குறைபாடும் இன்றி நடைமுறைப்படுத்திட வருவாய்த்துறையில் கூடுதல் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யக்கோரி நேற்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் அலுவலர்கள், கோரிக்கை அட்டை அணிந்து போராடியவாறு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோதப்போக்கு, பொய் வழக்கு புனைதலை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தி ரத்து செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

அந்த வகையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம், திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றி வரும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை அட்டையை அணிந்தவாறு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடபதி, மாவட்ட இணை செயலாளர் விமல்ராஜ், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கணேஷ், முருகன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் 9 வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story