மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்


மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
x

தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் த.மா.கா.வினர் கோரிக்கை மனு அளித்தனர்.

வேலூர்

தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் த.மா.கா.வினர் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மின்சார கட்டணம் உயர்வு

கூட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி, வேலூர் புறநகர் மாவட்ட தலைவர் எஸ்.அருணோதயம் ஆகியோர் தலைமையில் மாநில செயலாளர் சிவானந்தம், மாநகர பொதுச்செயலாளர் சைதை சீனிவாசன், மாநகர துணைத்தலைவர் கீதாதேசபக்தன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. கொரோனா தொற்றால் வியாபாரம் பாதிக்கப்பட்டு சிறு, குறு தொழில் நசிந்து ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டுவரி, சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியது. தற்போது மின்கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இலவச வீட்டுமனை

கூட்டத்தில், வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.

அதில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து போதிய வருமானம் இன்றி தவிக்கும் எங்களால் மாதவாடகை சரியாக கொடுக்க முடியவில்லை. வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடம் அரியூரில் உள்ளது.

அந்த இடத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குடியாத்தத்தை அடுத்த தென்சின்னதோட்டாளம் பகுதியை சேர்ந்த அம்சா என்பவர் அளித்த மனுவில், எனக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவியான தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் பெற்று கொண்டேன்.

ஆனால் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் வங்கிக்கணக்கிற்கு வரவில்லை.

இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, எனக்குவர வேண்டிய பணம் வேறோருவரின் வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக அனுப்பியது தெரியவந்தது. எனவே எனது திருமண உதவித்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.


Next Story