வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெற்ற வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்ற திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், செயல்படுத்த வேண்டிய அடிப்படை தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் வீடு வழங்கும் திட்டம், ஊராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட மின் மோட்டார்கள், பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.
பணிகளை விரைந்து முடிக்காமல் மற்றும் பணிகளை முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது குறித்து அதிகாரிகளிடமும், ஊராட்சி செயலாளர்களிடமும் கலெக்டர் கேள்விகளை எழுப்பினார்.
கூட்டத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.