வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் தரேஸ்அகமது, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தடுப்பணை அமைத்தல், பண்ணைகுட்டை அமைத்தல், நர்சரி பண்ணை அமைத்தல், ஆட்டுக்கொட்டகை அமைத்தல், நியாய விலை கடை கட்டுதல், சிமெண்டு கான்கிரீட் சாலை அமைத்தல் குறித்தும், 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் செயல்பாடுகள், ஊராட்சி பொதுநிதி தொடர்பாகவும், பாரத பிரதமர் வீடுகட்டும் பயனாளிகள் குறித்தும், குடிசை வீட்டு கணக்கெடுக்கும் பணிகள் குறித்தும் ஜல் ஜீவன் திட்டத்தில் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக, கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் தரேஸ்அகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.