தர்மபுரி அருகேவேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது17 மூட்டைகள் பறிமுதல்
தர்மபுரி அருகே வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார் 17 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி சிக்கியது
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவிட்டார். இதையடுத்து மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ஏட்டுகள் சக்திவேல், கோவிந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர்- தர்மபுரி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்மேடு அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வேனில் 17 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது.
கைது
இதுதொடர்பாக அந்த வேனில் வந்த சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அன்பு (வயது 38) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ரேஷன் அரிசியை கடத்தி செல்வது உறுதியானது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். வேனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.