கிருஷ்ணகிரி மாவட்டத்தில்1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் உள்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணி
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மூர்த்தி, நேரு ஆகியோர் ஓசூர் அடுத்த கும்மளாபுரம் சோதனைச்சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரான கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லை சேர்ந்த அல்லாபகஸ் (வயது 26) என்பவரை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. மேலும் அரிசி மற்றும் கார் உரிமையாளரான மத்திகிரியை சேர்ந்த மாமூத் (எ) முகமதுவை தேடி வருகின்றனர்.
நிப்பட் தயாரிக்கும் கம்பெனி
இந்த குழுவினர் காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அரிசி மூட்டையை எடுத்து வந்ததை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அது ரேஷன் அரிசி என கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த அரிசியை எடுத்து வந்தவர் கருக்கன்சாவடி, நரிமேடு, முனியப்பன் கொட்டாய், போத்தாபுரம் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள நிப்பட் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அவ்வாறு வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் நரிமேடு பகுதியை சேர்ந்த வேடியப்பன் (55) என்பவரை கைது செய்தனர். பின்னர் அரிசியை வாங்கி வர கூறிய கருக்கன்சாவடி மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (48) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.