தேக்கி வைத்த வைகை தண்ணீரால் 2-ம் போக நெல் விளைச்சல் அமோகம்


தேக்கி வைத்த வைகை தண்ணீரால் 2-ம் போக நெல் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கண்மாய்களில் தேக்கி வைக்கப்பட்ட வைகை தண்ணீரால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் 2-ம் போக நெல் விளைச்சல் அதிகமாகி உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

கண்மாய்களில் தேக்கி வைக்கப்பட்ட வைகை தண்ணீரால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் 2-ம் போக நெல் விளைச்சல் அதிகமாகி உள்ளது.

ைவகை தண்ணீர்

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. அதுபோல் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்குகின்றனர். அதிலும் குறிப்பாக வடகிழக்கு பருவமழை சீசனில் தான் நெல் விவசாயத்தை விவசாயிகள் எதிர்பார்ப்புடன் தொடங்குகின்றனர்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையே இல்லாததால் நெல் விவசாயம் என்பது அதிகமாகவே பாதிக்கப்பட்டு விட்டது. மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகி போயின. மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்தாலும் வைகை அணையில் இருந்து வந்த வைகை தண்ணீரால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில் நெல் விவசாயம் காப்பாற்றப்பட்டது. குறிப்பாக ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, களக்குடி, சத்திரக்குடி, நல்லாங்குடி, ஆர்.காவனூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் வைகை தண்ணீர் வரத்தால் முதல் போக நெல் சாகுபடி நல்ல விளைச்சலாக இருந்தது.

2-ம் போக நெல்

இந்த நிலையில் வைகை அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய், களக்குடி கண்மாய், நல்லாங்குடி, மேலச்சீத்தை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள கண்மாய்களிலும் தற்போது வரை தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே திருஉத்தரகோசமங்கை, களக்குடி, மேலச்சீத்தை, சத்திரக்குடி உள்ளிட்ட கிராமங்களில் வைகை தண்ணீர் கண்மாய்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் அதை பயன்படுத்தி இந்த கிராமங்களில் விவசாயிகள் இந்த ஆண்டு 2-ம் போக நெல் விவசாய பணிகளை தொடங்கி ஆர்வமுடன் ஈடுபட்டனர். இதில் களக்குடி, மேலச்சீத்தை, நல்லாங்குடி, சத்திரக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நெல் விதைகள் நன்றாக வளர்ந்துள்ளன.

இதுபற்றி களக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, இதுவரை களக்குடி கிராமத்தில் முதல் போக நெல் விவசாய பணிகளை மட்டுமே செய்துள்ளோம். முதல் முறையாக இந்த ஆண்டுதான் இரண்டாம் போக நெல் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். வைகை தண்ணீரால் தான் இந்த ஆண்டு முதல் போக நெல் சாகுபடி விளைச்சல் அமோகமாக இருந்ததுடன் இரண்டாம் போக நெல் சாகுபடி விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றோம். இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story