அரியலூரில் பரபரப்பு: போலீசார் தாக்கியதில் விவசாயி சாவு


அரியலூரில் பரபரப்பு: போலீசார் தாக்கியதில் விவசாயி சாவு
x

அரியலூரில் போலீசார் தாக்கியதில் விவசாயி இறந்த சம்பவத்தில் இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

தஞ்சை மாவட்டம் அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கடந்த 24-ந் தேதி அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்காள் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்களுடன் சீர்வரிசை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வல்லவன் (வயது41), ரவி(43) சுமதி(43), அருண்குமார்(30), ராஜதுரை(31) ஆகியோர் புருஷோத்தமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புருஷோத்தமன் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தன்னை சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மேற்படி வல்லவன் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விவசாயி மீது தாக்குதல்

கடந்த 25-ந் தேதி அருண்குமாரை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அருண்குமார் வீட்டில் இல்லாததால் அதே கிராமத்தில் உள்ள அருண்குமாரின் மாமனாரும், விவசாயியுமான செம்புலிங்கம் (52) வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசார் செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செம்புலிங்கம் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

செம்புலிங்கத்தின் உடல்நிலை மோசமடைந்ததால் அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் ரத்தப்போக்கு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 7-ந் தேதி திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செம்புலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் செம்புலிங்கம் சிகிச்சை பெற்றுவந்த ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பின்னர் செம்புலிங்கத்தை தாக்கிய போலீசாரை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், செம்புலிங்கம் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

8 போலீசார் மீது வழக்கு

போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவருடைய உறவினர் அளித்த புகாரின்பேரில் செம்புலிங்கத்தை தாக்கிய 8 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து செம்புலிங்கத்தின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே செம்புலிங்கத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க.வினர் அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Next Story