குறுகிய சாலையால் விபத்து அபாயம்
கிணத்துக்கடவில் குறுகிய சாலையால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் சாலையை விரிவுப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் குறுகிய சாலையால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் சாலையை விரிவுப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிக்கடி விபத்து
கோவை-பொள்ளாச்சி இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கிணத்துக்கடவு ஊருக்குள் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இருபுறமும் சர்வீஸ் சாலை (அணுகு சாலை) அமைக்கப்பட்டது. இந்த சாலை ஒரு வழிச்சாலை என்பதாலும், மிகவும் குறுகிய சாலை என்பதாலும் எதிரே வரும் மற்றவாகனங்கள் செல்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மேற்கு பகுதியில் அண்ணாநகர், செம்மொழிகதிர்நகர், கிரீன் கார்டன், மீனாட்சி கார்டன், பகவதிபாளையம், நெ.10 முத்தூர், வன்னி குமாரசாமி கோவில் ஆகிய பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் கிணத்துக்கடவில் இருந்து தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 1½ கி.மீ. தொலைவில் உள்ள சிங்காரம்பாளையம் பிரிவுக்கு சென்று திரும்பி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் குறுகிய சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையை விரிவுப்படுத்த வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலை குறுகியதாக அமைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அண்ணாநகர், செம்மொழிக்கதிர் நகர் கிரீன் கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மேம்பாலத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் செல்லும்போது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே சர்வீஸ் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சர்வீஸ் சாலையை விரைந்து விரிவுப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.