குன்றத்தூரில் போதிய தடுப்புகள் இல்லாமல் நடக்கும் சாலை விரிவாக்க பணிகளால் விபத்து ஏற்படும் அபாயம்


குன்றத்தூரில் போதிய தடுப்புகள் இல்லாமல் நடக்கும் சாலை விரிவாக்க பணிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
x

குன்றத்தூரில் போதிய தடுப்புகள் இல்லாமல் நடக்கும் சாலை விரிவாக்க பணிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

காஞ்சிபுரம்

குன்றத்தூர் சாலை விரிவாக்க பணிகள்

போரூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை விரிவாக்க பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் முழுமையாக முடிவடைந்து சாலையின் நடுவில் தடுப்புச்சுவர்களும் அமைத்து வாகனங்கள் சென்று வரும் நிலையில் உள்ளது. தற்போது குன்றத்தூர் மற்றும் கொல்லசேரி பகுதிகளில் சாலை விரிவாக்க பணியானது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் சாலையின் ஓரத்தில் தற்போது மழைநீர் கால்வாய் பணியானது முழுமையாக முடிக்கப்படாத நிலையில் சாலை விரிவாக்க பணியானது முடிவடைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தொடர்ந்து சாலை விரிவாக்க பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போதிய தடுப்புகள் இல்லை

இந்த நிலையில் இந்த பகுதியில் போதிய தடுப்புகள் அமைக்கப்படாமல் சாலை விரிவாக்க பணி நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலையின் ஓரங்களில் தடுப்புகள் இல்லாமல் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி இங்கு விழுந்து காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் முறையான தடுப்புகளும் மின்விளக்குகளும் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.

கோரிக்கை

மேலும் இந்த பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கல்லூரி செயல்படுகிறது காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த சாலையை கடக்கும் நிலையில் அதி வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் மீது மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியின் போது உரிய தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story