ஏரிக்குள் கிடக்கும் மரங்களால் விபத்து அபாயம்
ஊட்டியில் ஏரிக்குள் கிடக்கும் மரங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஊட்டி
ஊட்டியில் ஏரிக்குள் கிடக்கும் மரங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஏரியில் விழும் மரங்கள்
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு அடுத்தபடியாக படகு இல்லத்திற்கு வருவார்கள். சீசன் நாட்களில் இங்கு தினந்தோறும் 5 ஆயிரம் பேரும், சீசன் இல்லாத நாட்களில் தினந்தோறும் 1000 பேரும் வந்து செல்வார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து படகு சவாரி செய்து மகிழ்வார்கள். இந்தநிலையில் ஊட்டி ஏரியை சுற்றிலும் ஏராளமான ராட்சத கற்பூரம், பைன், சவுக்கு மரங்கள் மற்றும் காட்டு மரங்கள் உள்ளன. ஊட்டியில் பலத்த காற்றுடன் மழை பெய்தால் ஏரியின் கரையோரங்களில் உள்ள மரங்கள் தண்ணீரில் விழும். இந்த மரங்கள் சுற்றுலாத்துறை சார்பில் உடனுக்குடன் அகற்றப்படும்.
அகற்ற வேண்டும்
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது, தேனிலவு படகு இல்லம் பகுதியில் ஏரியின் கரையோரத்தில் இருந்த மரங்கள் தண்ணீரில் விழுந்துள்ளது. இந்த மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகிறார்கள். அவர்கள் செல்லும் படகுகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, பனிமூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் மரம் இருப்பதை கவனிக்காமல் ஏரியில் படகு ஓட்டி சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மரங்களை உடனடியாக அகற்ற சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.